Tuesday, March 13, 2012

குலாபி கேங் - பிங்க் நிற‌ப் புர‌ட்சிப் பூக்க‌ள்

குலாபி கேங் - இந்தப் பெயரை நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்போம்? சமீபத்தில் தான் ஒரு ந‌ட்பின் மூல‌ம் (www.facebook.com/hannah.priya) இந்தப் புரட்சிகர அமைப்பினைப் பற்றி அறிந்து கொண்டேன்.

யார் இவர்கள்? உத்திரப்பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பண்டாவைச் சேர்ந்த உழைப்பாளிப் பெண்கள். இம்மாவ‌ட்ட‌த்தில் 20% மேல் மிக‌வும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ச் ச‌மூக‌த்தைச் சேர்ந்த‌ ஏழை ம‌க்க‌ள்.

பிங்க் நிறச் சேலையை அடையாளமாகவும் கையில் லத்திகளையும் தங்கள் ஆயுதமாகவும் கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவர்களைப் படையெடுத்துச் சென்று நையப்புடைப்பதில் தொடங்கியது இவர்களின் புரட்சி.
2008 ல் எடுத்த‌ க‌ண‌க்குப் ப‌டி 20,000 உறுப்பின‌ர்க‌ளும் ஃப்ரான்ஸ் நாட்டின் த‌லைந‌க‌ரான‌ பாரிசில் ஒரு கிளையும் கொண்டு வ‌ள‌ர்ந்திருக்கிறார்க‌ள்.

சீரிய‌லில் வ‌ரும் கொடுமைக‌ளைப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டு "அடப்பாவி, இவனையெல்லாம் அடிச்சுச் சாத்தணும்" என்று வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் பெண்கள் இப்ப‌டி ஒன்றை உண்மையில் செய்ய‌ முடியும் என்று நினைத்துப் பார்த்திருப்பார்க‌ளா?

ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌தில் திரும‌ண‌ம் செய்து கொடுக்க‌ப்ப‌ட்டு ப‌தின்மூன்று வ‌ய‌தில் முத‌ல் குழ‌ந்தையைப் பெற்று, ஐந்து குழ‌ந்தைக‌ளுக்குத் தாயுமான‌ ச‌ம்ப‌த் பால் தேவி என்ற பெண்மணி ஆரம்பித்தது தான் இந்தக் குலாபி கேங். இவர் முன்னாள் அர‌சுச் சுகாதார‌ ஊழிய‌ர்.

வ‌ழ‌க்கேதுமின்றி கைது செய்ய‌ப்ப‌ட்டுத் துன்புறுத்த‌ப்ப‌ட்ட பிற்படுத்தப்பட்ட‌ இன‌த்தைச் சேர்ந்த‌ ஓர் ஆணுக்காக‌வும் காவ‌ல்நிலைய‌த்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்க‌ள்.
அத‌னால் தான் பெண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, ஒடுக்க‌ப்ப‌டுகிற‌ ஆண்க‌ளும் இவ‌ர்க‌ளுட‌ன் இணைந்து ஆர்வத்துடன் போராடுகிறார்க‌ள். த‌ங்க‌ள் ப‌குதியில் ந‌ட‌க்கும் பல்வகை ஊழல்கள் ம‌ற்றும் குற்ற‌ங்க‌ளுக்கு எதிராக‌ப் ப‌ல போராட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொண்டிருக்கிறார்க‌ள்.

"இந்தியாவின் கிராமப் புறச் சமூகம் பெண்க‌ளுக்கு மிக‌வும் அநீதி இழைப்பதாக இருக்கிற‌து. அங்கு பெண்க‌ள் ப‌டிப்ப‌த‌ற்கு அனும‌தி இல்லை, இள‌ம்வ‌ய‌திலேயே க‌ட்டாய‌த் திரும‌ண‌ம் செய்விக்க‌ப்ப‌ட்டு, ப‌ண‌த்துக்காக‌ விற்க‌ப்ப‌டும் ப‌ண்ட‌ங்க‌ளாய் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிறார்க‌ள். கிராம‌ப்புற‌ப் பெண்க‌ள் க‌ல்வி பெற்றுச் சுத‌ந்திர‌ம் அடைய‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌மாகிற‌து."

"இங்கு யாருமே எங்க‌ள் உத‌விக்கு வ‌ருவ‌தில்லை. அதிகாரிக‌ளும் காவ‌ல்துறையும் ஊழ‌லில் ஊறிய‌வ‌ர்க‌ளாக‌வும் ஏழைக‌ளுக்கு எதிரான‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள். அதனால் எங்களுக்கு நீதி வேண்டியும் த‌வ‌று செய்ப‌வ‌ர்க‌ளை உண‌ர‌ வைக்கவும் ச‌ட்ட‌த்தை எங்க‌ள் கையிலெடுக்க‌ வேண்டி வ‌ருகிற‌து. த‌ற்காப்புக்காக‌ ல‌த்தியை எப்ப‌டிக் கையாள வேண்டும் என்று ஒரு பெண்ணுக்குக் க‌ற்பித்த‌ப‌டியே பேசுகிறார் ச‌ம்ப‌த் பால் தேவி.

பெண் ச‌க்தி எவ்வ‌ள‌வு ம‌க‌த்தான‌து என்ப‌த‌ற்கு எடுத்துக்காட்டு இந்த‌க் குலாபி கேங் பெண்க‌ள் தாம். பெண்ணைக் காளியாகவும் அம்மனாகவும் வ‌ழிபட்டாலும் அவ‌ள‌து ச‌க‌ல‌ ச‌க்திக‌ளையும் ப‌றிப்ப‌தைய‌ன்றி இச்ச‌மூக‌ம் வேறென்ன‌ செய்திருக்கிற‌து. இச்ச‌மூக‌த்தில் இனி அதிக‌ம் தேவை இந்த‌ நித‌ர்ச‌ன‌க் காளிக‌ள் தாம்.


மேலும் விவ‌ர‌ங்க‌ளுக்கு...

http://news.bbc.co.uk/2/hi/7068875.stm

http://www.gulabigang.org/?page_id=196

http://en.wikipedia.org/wiki/Gulabi_gang

Friday, February 10, 2012

ஏன் இப்ப‌டிச் செய்தாய் இர்ஃபான்?

எல்லாரையும் நேற்று அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஆசிரியையை மாணவன் குத்திக் கொலை செய்தது.

பிரம்பு கொண்டடித்த ஆசிரியரைக் கோபத்தில் பிரம்பைப்பிடுங்கித் திருப்பியடித்து ஓடிய குறும்புக்கார மாணவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கரும்பலகையில் கேலிச்சித்திரம் வரைந்து செய்து தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டதை அறிந்திருக்கிறோம். அவ்வளவு ஏன், என் தோழி தன்னைத் திட்டிய, அல்லது குறைத்து மதிப்பெண் இட்ட ஆசிரியையை நாயே பேயே என்று நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பின் பக்கங்களைக் கிழித்தெறிந்து விடுவாள்.

ஆனால், இது என்ன? திட்டமிட்டுக் கத்தியை ஒளித்தெடுத்து வந்து, கெஞ்சக் கெஞ்சக் குத்திக் கொல்வது என்பது, அதுவும் 14 வயதேயான சிறுவன் செய்திருப்பது மிகுந்த அச்சமூட்டுகிறது.

ந‌ட‌ந்த‌து மிக‌ப்பெரிய‌ அச‌ம்பாவித‌ம். கொலையுண்ட‌ ஆசிரியைக்கும் அவ‌ர்த‌ம் குடும்ப‌த்துக்கும் என் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள். பிள்ளைக‌ள் ந‌ன்றாக‌ப் ப‌டிக்க‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் க‌ண்டிக்க‌ப் போய் உயிரையே விட்ட‌ அந்த‌ ஆசிரிய‌ரின் நிலை ப‌ரிதாப‌மான‌து.

என் மாண‌வ‌ப்ப‌ருவ‌த்தைச் ச‌ற்றே பின்னோக்கிப் பார்த்தால்...

ப‌த்தாவ‌து ப‌டிக்கும் போது எங்க‌ள் வ‌குப்பில் க‌டைசியாக‌ வ‌ரும் மாண‌வனுக்கு எங்க‌ள் ஆசிரியை (அவ‌ருக்கு அறுப‌து வ‌ய‌திருக்கும்) த‌னியாக அழைத்து பாட‌ம் சொல்லிக் கொடுப்பார். எங்க‌ளையெல்லாம் ப‌டிக்க‌ச் சொல்லிவிட்டு அவ‌னை அம‌ர்த்தி வைத்து ம‌ண்டையில் கொட்டிக் கொண்டிருப்பார். பிரம்பால் அடித்துத் துவைப்பார். எங்க‌ளுக்கே பாவமாக‌ இருக்கும்.

ஆனால் தேர்வுக்கு முன் நடந்த பிரிவுபசார விருந்தில் அவன் எழுந்து பேசினான். "நான் இதுவரை ரொம்ப மோசமாகத் தான் படித்தேன். ஆனால் பொதுத்தேர்வில் நான் நிச்ச‌ய‌ம் நல்ல மதிப்பெண் வாங்கித் தேர்ச்சியடைவேன். அத‌ற்கு முழுக்காரணம்....மிஸ் தான்" என்றதும் அவ‌ர் அவ‌னைக் க‌ட்டிக் கொண்டு ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் விட்ட‌து இன்னும் என் நினைவிலிருக்கிற‌து.

அவ்வளவு அடியையும் மீறி எங்கோ அவர்களிடையே ஆசிரியர் மாணவர் நல்லுறவு இருந்திருக்கிறது. ஆசிரியையின் உண்மையான அக்கறையும் அதை மாணவன் புரிந்து கொண்ட‌த‌ற்குமான‌ இடம் இருந்திருக்கிறது.

இதற்கு மாறான இன்னொரு நிகழ்ச்சி...என‌க்கு ஒரே ஒரு ஆசிரியை மீது தான் அதிக‌ அள‌வில் கோப‌ம் வ‌ந்திருக்கிற‌து. மிகவும் கண்டிப்பு வாய்ந்த, - வ‌குப்பில் எல்லோருக்கும் பிடித்த‌ ஆங்கில‌ ஆசிரியை அவ‌ர். என‌க்கும் ஆர‌ம்ப‌த்தில் அவ‌ரைப் பிடித்துத் தானிருந்த‌து; அவ‌ர் என் தோழியுட‌ன் என்னை ஒப்பிட்டுப் பேசும் வ‌ரை. முத‌ல் ம‌திப்பெண் வாங்கும் அவ‌ளையும் என்னையும் தேவையில்லாம‌ல் ஒப்பிட்டு என்னை ம‌ட்ட‌ம் த‌ட்டுவார். அதாவ‌து நான் த‌லைக்க‌ன‌த்தால் ம‌திப்பெண்க‌ளைத் த‌வ‌ற‌ விடுவ‌தாக‌வும், த‌லைக்க‌ன‌மில்லாத‌தால் என் தோழி எப்போதும் முத‌லாவ‌தாக‌ வ‌ருவ‌தாக‌வும். (என‌க்குத் த‌லைக்க‌ன‌ம் என்று சொன்ன‌ ஒரே ஆசிரியையும் அவ்ர் தான்) அதுவாவ‌து போக‌ட்டும்,
நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்து க‌ட்டுரைப் போட்டியில் எழுதிய‌ என் தோழிக்க்கு முத‌ல் ப‌ரிசினையும், என‌க்குத் திருடி என்ற‌ப் ப‌ட்ட‌ப்பெய‌ரினையும் விசாரிக்காம‌ல் அளித்த‌ போது நொறுங்கிப் போனேன்.

நாட்க‌ண‌க்கில் அவ‌ரைப் ப‌ழிதீர்ப்ப‌து ப‌ற்றிச் சிந்தித்திருக்கிறேன். (யாருக்கும் தெரியாம‌ல் எப்ப‌டி அவ‌ர‌து டூவீல‌ரைப் ப‌ஞ்ச‌ர் செய்வ‌து என்று). அவ்வ‌ள‌வு திற‌மை போதாத‌தால் என் க‌ன‌வு நிறைவேறாம‌லே போயிற்று. ஏதோ ந‌ல்ல‌ நேர‌ம் அவ‌ர் விரைவில் ப‌ள்ளியை விட்டுச் சென்று விட்டார்.

நான் சொல்ல‌ வ‌ருவ‌தென்னவென்றால் ப‌தின்ம‌ வ‌ய‌தில் இந்த‌ ஒப்பீடு என்ப‌தும் ப‌க்கசார்புட‌ன் ந‌ட‌த்துவ‌து என்ப‌தும் எந்த‌ அள‌வு ம‌ன‌ உளைச்ச‌லைத் த‌ரும் என்ப‌தை லேசில் ஒதுக்கி விட‌ முடியாது. இதை உமா ம‌கேஸ்வ‌ரியின் கொடுமையான‌ ம‌ர‌ண‌ம் ந‌ம‌க்கு உண‌ர்த்தும் எத்த‌னையோ பாட‌ங்க‌ளில் இதுவும் ஒன்று என்ப‌தை ம‌ற‌ந்து விட‌க்கூடாது.

நாளைய தலைமுறை மலர்ந்து செழிக்க வேண்டிய ப‌ள்ளி வ‌குப்ப‌றைகள் கொலைக்கூடங்களாகாமல் த‌டுக்க‌ வேண்டிய‌து குறித்து அனைவ‌ருமே சிந்திக்க‌ வேண்டும்.

Tuesday, January 3, 2012

மயக்கம் என்ன - திரைப்பார்வை

செல்வராகவன் இத‌ற்கு முன் எடுத்த‌ எந்த‌ப் ப‌ட‌த்தையும் முழுமையாக‌ப் பார்க்க‌முடிந்த‌தில்லை. ரெயின்போ காலனி படம் பார்க்கப் போன போது தியேட்ட‌ரை விட்டுத் திட்டிக் கொண்டே வெளியே வ‌ந்திருக்கிறேன். வித்தியாச‌மா எடுக்கிறேன்னு விள‌ங்காத‌ ஒரு குப்பையை எடுத்திருப்பார், பொண்ணுங்களை அநியாயத்துக்குக் கேவலப்படுத்தி இருப்பார், சில‌ சீன்க‌ள் ம‌ட்டும் ர‌சிக்கிற‌ மாதிரி இருக்கும், அத‌ற்காக‌ மூன்று ம‌ணிநேர‌த்தை வீண‌டிக்க‌ப் போகிறோம் என்று நினைத்துத் தான் ப‌ட‌ம் பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். ப‌ட‌ம் பார்த்தால் பைத்திய‌ம் பிடிப்ப‌து நிச்ச‌ய‌ம் என்ற‌ ரீதியில் ஒரு விம‌ர்ச‌ன‌ம் வேறு ப‌டித்திருந்தேன்.

ஆனால் ஒரு (புகைப்ப‌ட‌க்) க‌லைஞ‌னின் ஆசைக‌ள், நிராசைகள் இவ‌ற்றை ஒரு சாமானிய‌ன் உண‌ர்ந்து கொள்ளும் அள‌வு உண்மையாகவும், அல‌ட்ட‌ல்க‌ள் இல்லாம‌லே ம‌ன‌தைத் தொடும் அள‌வுக்கும் ரொம்ப‌ நேர்த்தியாக‌க் காட்டி இருக்கிறார். த‌னுஷ் பிர‌மிக்க‌ வைக்கிறார். ப‌ல‌ இட‌ங்க‌ளில் வாய் விட்டு வாவ் சொல்ல‌வைத்த‌து அவரது ந‌டிப்பு.

முக்கியமாக ஹீரோயிசம் இல்லாமல் ஹீரொவைக் காட்ட முடிவதற்கே ஒரு தைரியம் வேண்டுமே! அதற்காகவே பாராட்டலாம். புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் தான் எடுத்த புகைப்படத்தைத் தனதென்று சொல்லி பேட்டி கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொப்புளிக்க அவனை உதைக்கக் கிளம்பாமல், அவரிடம் மெல்லச் சென்று, "அது என்னோடதுன்னு சொல்லிடுங்க ஸார், உங்களுக்கு இது ஒரு விஷயமா, ஆனா எனக்கு இது லைஃப் ஸார்..." என்று கையாலாகாத்தனத்துடன் தனுஷ் கெஞ்சுவது புதுமை தானே?

தனுஷ் பாட்டியைப் ப‌ட‌ம் எடுக்கும் காட்சி, அது முடிந்த‌தும் த‌லை நிமிர்ந்து யாமினிக்குப் ஃபோன் செய்து பேசுவ‌து - க்ளாஸ்!!

யாமினியாக‌ வ‌ரும் ரிச்சா கண்டிப்பாக வரவேற்க வேண்டிய நடிகை. க‌ண்க‌ள் அப்ப‌டிப் பேசுகின்ற‌ன. சிரிப்பும் கொள்ளை அழகு! வீட்டைக் காலிசெய்ய‌ச் சொல்லும் ந‌ர‌சிம்ம‌னிட‌ம் அவ‌ர் பேசுவது அதிரடி. திரும‌ண‌ம் ஆன‌தும் ஹீரோயின்க‌ள் மொத்த‌மாக அவுட் ஆஃப் கேர‌க்ட‌ர் ஆகிவிடுவார்க‌ள். இந்தப் படத்தில் அது ரொம்ப இல்லையென்றாலும் திரும‌ண‌த்துக்குப் பின் முழுதும் சேலையிலேயே வ‌ருவது, சாமி ப‌ட‌த்துக்கு முன் நின்று கும்பிடுவ‌து போல் காண்பிப்ப‌து எல்லாம் கொஞ்ச‌ம் அந்த‌ ர‌க‌த்தில் இழுத்துக் கொண்டு தான் போகிற‌து. கடைசியில் பாசிட்டிவாக‌ முடித்திருப்ப‌து ச‌ந்தோஷ‌மே என்றாலும் ப‌ட‌ம் முழுதும் இருந்த‌ க்ளாஸ் மிஸ்ஸிங்.

காட்சிகளை மீறி உறுத்தாம‌ல் ர‌ம்மிய‌மாக‌ இசை அமைத்திருக்கிறார் ஜீவீ பிர‌காஷ்.
எங்கிருந்து சுட்டாரோ, ஆனால் ந‌ன்றாக‌வே சுட்டுப் போட்டிருக்கிறார் பாட‌ல்க‌ளை. :-)

ஒரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ச‌க‌ல‌ வித‌ க‌ஷ்ட‌ங்க‌ளையும் ச‌கித்துக் கொள்வ‌தைத் த‌விர‌ வேறு சிற‌ப்பில்லையா பெண்ணுக்கு? அவ‌ன‌து ப‌ர்ஸில் காத‌ல்ம‌னைவி ஃபோட்டோவாக‌ இடம் பெறுவதும் அவனின் குழந்தையைச் சுமப்பதும் தான் அவள்‌ அடைய‌க் கூடிய‌ அதிக‌ப‌ட்ச சந்தோஷம், அந்தஸ்து எல்லாமா? என்றெல்லாம் மனதில் தோன்றினாலும், யாமினியும் கார்த்திக்கும் ம‌ன‌தில் அதைவிட‌ அதிக‌ இடத்தைப் பிடித்து கொண்டுவிட்டார்கள்! ஸோ, எனக்குப் படம் பிடித்திருந்தது.

Wednesday, November 9, 2011

நேஹா நேர‌ம் (after a long break!)

வ‌ள‌ர்ந்து வ‌ருகிறாள். ஓயாத ஆட்டமும் பேச்சும். இர‌வு அவ‌ள் தூங்கிய‌ பிற‌கு தான் (இளையவளும் கண்ணயர்ந்திருந்தால் தான்) த‌‌லை வ‌ருடிக் கொஞ்சி முத்த‌மிட‌ முடிகிற‌து.

Very very moody these days. தின‌மும் வ‌ருகிற‌ எதிர்வீட்டு ஆன்டியை ஒரு நேர‌ம் போ போ என்கிறாள். இன்னொரு நேர‌ம் "ஐல‌வ்யூ ஆன்ட்டி" என்று க‌ட்டிக் கொள்கிறாள்.

அவள் ஏதாவது ரசிக்கிற மாதிரி சொல்லிவிட்டாலோ செய்து விட்டாலோ நாம் ஏதாவது சொல்வதற்குள், ஒரு குறும்புப் பார்வையுடன் "ப்ரில்லியன்ட்", "அமேசிங்", "ரொம்ப ஓவர்" என்று எதையாவது சொல்லிக் கொள்கிறாள்.

சார்ட் வொர்க் செய்ய‌ப் பிடித்திருக்கிற‌து. சார்ட்டையும் வாட்ட‌ர் க‌லர் பாக்ஸையும் கொடுத்து விட்டால் ஒரு அரைம‌ணி நேர‌ம் நிம்ம‌தி.

குட்டிப்பாப்பாவைச் சீண்டுவ‌து அதிகமாகி விட்டது. அதே போல் கொஞ்சுவதும். (இரண்டுக்கும் பொம்மைகளைப் பரஸ்பரம் பிடுங்குவது, அம்மா மடியில் ஏறிக் கொள்வது என்று எல்லாவற்றிலும் போட்டி தொடங்கிவிட்டது. கூடியவிரைவில் இளையவள் முந்தி விடுவாள் என்றும் தோன்றுகிறது.) ஆனாலும் தின‌மும் தூங்கும் போதும் பள்ளிக்குப் புற‌ப்ப‌டும்போதும் எவ்வ‌ள‌வு தாம‌த‌மாகி விட்டாலும் ச‌ரி, "ஷைலாக்கு முத்த‌ம் குடுக்கணும்" என்று த‌ந்து விட்டால் தான் ஆயிற்று.

"இனிமே இப்படிப் பண்ணா குட்டிப்பாப்பாவை பக்கத்து வீட்ல கொடுத்துடுவேன்" என்ற மிரட்டலுக்கு மட்டும் இன்னும் பணிகிறாள். ம‌ற்ற‌ அத‌ட்ட‌ல் மிர‌ட்ட‌லுக்கெல்லாம் ப‌ளிச் ப‌ளிச் ப‌ல்பு தான். ("ஓகே, என‌க்கென்ன போச்சு!" "இல்ல‌, நான் பேட் கேர்ல் தான்.")

"ந‌ம்ம‌ ரென்டு பேரும் சேர்ந்து அம்மாவைப் படுத்தலாமா?"
"ஷைலா நீயும் சாப்பிடாதே."
"நாங்க‌ தூங்க‌வே மாட்ட்ட்டோம். ஆட்ட‌ம் போட‌ப் போறோம்" ‍
இதெல்லாம், "நீ ச‌ம‌த்தா இருந்தா தானே உன் த‌ங்க‌ச்சியும் உன்னை மாதிரியே இருப்பா" என்ற அதிபுத்திசாலித்த‌ன‌மான(!) வினையின் அதிர‌டி எதிர்வினைக‌ள்.


"சாமின்னா என்ன‌டா?"

"ஜீஸ‌ஸ்" (உபயம்: மாமியாரின் திடீர் விசிட்!)

"சாமி என்ன‌டா ப‌ண்ணும்?"

"ஒண்ணுமே ப‌ண்ணாது"

"உன‌க்கு சாமி பிடிக்குமா பேய் பிடிக்குமா?"

க‌ண்க‌ள் விரிய‌ "பேய்!" (காஞ்ச‌னா கொஞ்சம் பார்த்த‌ எஃபெக்ட்!)

முன்யோச‌னை இருக்கிற‌து. That's saying a lot, for being my daughter! ;-) அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது வ‌ண்டியெடுக்கும் முன் கேட் திற‌ந்திருக்கிற‌தா என்று பார்க்காம‌ல் கேட்டின‌ருகே வ‌ந்த‌வுட‌ன் அவ‌ளை இற‌ங்க‌ச் சொல்லிவிட்டு கேட்டைத் திற‌ந்தேன். சில‌நாட்க‌ளுக்குப் பின் ஒரு நாள் வ‌ண்டி எடுத்த‌போது அவ‌ளே சென்று பார்த்து "கேட் திற‌ந்திருக்கும்மா" என்றாள்.

ஒரு நாள் க‌ல‌ந்து வைத்த‌ காப்பி ஒன்று மேசை மீதிருந்த‌து. நான் பார்த்து விட்டு ப்ரியாவிடம், "ஏன் ப்ரியா காலையில் எழுந்து இன்னும் குடிக்கலை. எப்போ கலந்து கொடுத்தேன். காப்பி கூடக் குடிக்காம என்ன பண்றே.." என்று அர்ச்சனை ஆரம்பித்தேன். (ப்ரியா என் அத்தையின் பேத்தி. அவ‌ள் தான் இப்போது குழ‌ந்தைக‌ளைப் பார்த்துக் கொள்கிறாள்) ச‌ம‌ர்த்தாக‌ப் ப‌ள்ளிக்குத் தயாராகி நான் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருந்த‌ நேஹா அங்கு வ‌ந்தாள். காப்பியைப் பார்த்துவிட்டு, "அம்மா! இது உன்தும்மா...ப்ரியா அப்ப‌வே குடிச்சிட்டாம்மா..குடிச்சிட்டுச் சீக்கிரம் குளிக்கப் போம்மா" என்றாள். அப்போது தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ந்த‌து! ப்ரியா என்னைப் பார்த்த‌ பார்வையின் அன‌லையும் மீறி ஏனோ உச்சி குளிர்ந்த‌து!

ஒரு மாதமாக‌ ஊரிலில்லாத‌ அப்பாவை மிஸ் ப‌ண்ணினாலும் முதலில் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளவில்லை. ச‌ரி குழ‌ந்தை ப‌ழ‌கிவிட்டாள் என்று நினைத்திருந்தேன். அன்றொரு நாள் அவ‌ர் அழைத்த போது இவ‌ளைக் கூப்பிட்டுப் பேச‌ச் சொன்னேன். வெடித்து அழுத‌வ‌ள் என்னைக் க‌ட்டிக் கொண்டு பிடிவாதமாகப் பேச ம‌றுத்துவிட்டாள். Stunned!

சின்ன‌தாக‌ இருப்ப‌தால் குழ‌ந்தைக‌ள் சின்ன‌ விஷ‌ய‌ங்களா என்ன? இல்லவே இல்லை!

Saturday, October 29, 2011

முகில் பூக்கள்

மழையின் ரீங்காரப் பின்னணியில் அமைதியாய்க் குழந்தை மடியில் உறங்கி விட, நிச்சலனமாய் முகில்பூக்களை வாசித்த‌ அனுபவத்தை இன்னும் பெய்து கொண்டிருக்கும் இந்த மழையை விட அழகாய்ச் சொல்லிவிட முடியவில்லை

ஆம், மழை எப்போதையும் விட அழகாய்த் தெரிகிறது பிகு சரவணனின் முகில்பூக்களை வாசித்த பிறகு.

இக்கவிதைகளில் அழகு கொஞ்சுகிறது; உண்மையும் மிளிர்கிறது. கவிதைக்குப் பொய் அழகு என்பதை உடைத்தெறிகிறது எளிமையும் உண்மையும் கம்பீரமாய் நடைபயிலும் இக்கவிதைகள்.

கவிதை என்றாலே அலர்ஜி, யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் கவிதை, மடக்கி மடக்கி எதையோ எழுதி விட்டுக் கவிதை என்கிறார்கள் என்று கவிதைகள் குறித்த எதிர்மறையான பார்வை கொண்டோர் எல்லாம் இவரது கவிதைகளைப் படித்தால் கவிதைக் காதலர்களாகி விடுவது நிச்சயம்.

எல்லாமே நேரடிக் கவிதைகள். ஆனாலும் மீள்வாசிப்பில் பல கவிதைகளில் பலவிதமான மறைபொருள்களும் உருவகங்களும் தெரியவரும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது.

இயந்திரமயமாகிப் போன இப்பிளாஸ்டிக் உலகத்தில், பல்வேறு தர்க்கங்களும் வேறுபாடுகளும் நிறைந்த இணைய இலக்கியச் சூழலில், தான் மெய்மறந்து ரசிக்கும் இயற்கையையும் குறிப்பாய் மழையையும் விதவிதமாய் வியந்தோதிக் கொண்டிருப்பது பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது.

ரொம்பவும் பிடித்துப் போன சில இங்கே உங்களுக்காக:

பெய்கிறது மழை
அசைந்து
நடந்து ‍ பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை.
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்.

சிணுங்கிப் பூக்கும் அன்பு
மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்

வழித்துணை
யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது

இசைக் குறிப்புகள்
கடந்து போன‌
நாட்களில் தொலைந்த‌
இசைக் குறிப்புகளை
பாடிக் காட்டுகிறது
அந்தக் குயில்

நிறைய, இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கும் அற்புதமான எழுத்து.

முகில் பூக்கள்
பி.கு. சரவணன்
தகிதா பதிப்பகம்

Sunday, August 28, 2011

'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.

கேள்வியுற்றதும் நெஞ்சை உலுக்கிய சம்பவம் செங்கொடியின் வீர மரணம். ஆம், அது வீரமரணம் தான். உள்ளம் எத்தனை கொதித்தாலும் வெறுமனே கணினியில் விரல்களைத் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அதை முட்டாள்தனம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

யார் செத்தால் என்ன‌, எங்கே குண்டு வெடித்தால் என்ன, எல்லாமே நாளிதழில் இன்னொரு செய்திதான் என்றிருப்பவர்களுக்கு செங்கொடியின் தியாக‌ம் முட்டாள்த‌னமாக‌த் தெரிவ‌தில் விய‌ப்பென்ன‌?

என்ன‌ ஆயிற்று ந‌ம‌க்கு? கூட்டம் கூட்ட‌மாக அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் 'போரில் சாவு ச‌க‌ஜம்', தூக்குக்க‌யிற்றில் நிர‌ப‌ராதிக‌ள் தொங்கினால், 'அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜம்', விவ‌சாயிக‌ள் ப‌சிக் கொடுமையினால் த‌ற்கொலை செய்து கொண்டால், 'ஏழைக‌ளுக்கு இதெல்லாம் ச‌க‌ஜம்', த‌லித் பெண்க‌ளை ஊரே சேர்ந்து க‌ற்ப‌ழித்துக் கொன்றால், 'சாதிக்கல‌வ‌ர‌த்தில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்'.
தான் உயிராக‌ நினைக்கும் கொள்கை/கோரிக்கைக்காக‌ ஒரு போராளி உயிர் துற‌ந்தால் அது முட்டாள் த‌ன‌ம்! என்று 'ஜ‌‌ஸ்ட் லைக் த‌ட்' க‌ட‌ந்து போகும் நாம் தான், கோடிஸ்வரக்‌ கோமாளி ந‌டிக‌ன் ஒருவ‌ன் உட‌ல்நிலை பாதிக்க‌ப்பட்டால் 'தலைவா,...இறைவா' என்று க‌ண்ணிர் சிந்தி ஊர்வ‌ல‌ம்
போக‌த் த‌யாராக‌ இருக்கிறோம். உட‌ம்பு நோகாம‌ல் வீட்டுக்கு முன் மெழுகுவ‌ர்த்தி ஏற்றி வைத்து விட்டு ஊழலுக்கு எதிராய்ப் பெரும் புர‌ட்சி செய்து விட்ட‌தாய்ப் பெருமை கொள்கிறோம்.

செங்கொடி மூளைச் ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருப்பார், வ‌றுமை/கடன் தொல்லை தாங்க‌ முடியாம‌ல் த‌ற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கும். முத்துக் குமாரின் ம‌ர‌ண‌த்தையும் கொச்சைப் ப‌டுத்தியவ‌ர்க‌ள் தானே நாம்?

சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட்ட‌த்தில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே வ‌ருத்திக் கொள்ப‌வ‌ர்க‌ளையும் கேலிசெய்து இழிவு ப‌டுத்துவது வெகுகால‌மாக‌ ந‌ட‌ப்ப‌து தான். இவ்வாறாக‌த் த‌ன‌து உண‌ர்ச்சிக‌ளை ம‌ர‌த்துப் போன‌ நிலையில் வைத்திருப்ப‌து மாற்றங்களை விரும்பாத சோம்பேறிச் ச‌மூக‌த்துக்கும் அத‌ன் ஊட‌க‌ங்க‌ளுக்கும் வ‌ச‌தியாக‌ இருக்கிற‌து.

இப்பேர்ப்ப‌ட்ட‌வ‌ர்களையும் தங்கள் மரணத்தினால் த‌ட்டி எழுப்ப‌ முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததும், எத்தனையோ காலம் எழுச்சி மிக்க போராட்ட வாழ்வு வாழ்ந்து பல சாதனைகள் செய்திருக்கக் கூடிய உன் இன்னுயிரை உணர்ச்சி வேகத்தில் மாய்த்துக் கொண்டதும், இமாலயத் தவறு தான். ஆனாலும் ச‌கோதரி, நீ முட்டாள் அல்ல; அதுவும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரவர்க்கத்திடமும் தொடர்ந்து கேவலமாய் ஏமாந்து கொண்டிருக்கும் எங்களை விட ‌நீ முட்டாள் அல்ல; நிச்ச‌ய‌மாய் அல்ல‌.

செங்கொடிக‌ள் தீக்கிரையானாலும் ம‌டிந்து ம‌க்கிப் போவ‌தில்லை.

Monday, August 1, 2011

நேஹாவுடனான அவர்களின் நேரம்

நேற்று காலை உண‌வுக்கு ரொட்டி வாங்க வழக்கமாய்ச் செல்லும் க்ரேஸ் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள். அடுத்த நொடி அவர்கள் முகங்களில் பெருத்த ஏமாற்றம். "நேஹா வரலியா? நேஹாவை ஏங்க்கா கூட்டிட்டு வர்ல? அவளைப் பாத்து ஒருமாசம் இருக்கும், இல்ல?"

அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.

என‌க்கு ஏனோ க‌ண்ணில் ச‌ட்டென நீர் கோத்துக் கொண்ட‌து. வீட்டுக்கு விரைந்துவிட்டேன்.

"ஹை! பாப்பா உன் பேர் என்ன‌?...பாப்பா ட்ரெஸ் ந‌ல்லாருக்கே..த‌லை தான் கொஞ்ச‌ம் க‌லைஞ்சிருக்கு."

"போ! உன் த‌ல‌ தான் ந‌ல்லாவேல்ல‌..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்ன‌தை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுட‌ன் ந‌ட்பாகினாள். அங்கு போனாலே அவ‌ர்க‌ள் முறை வைத்துக் கொண்டு வ‌ந்து தூக்கிச் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப‌ நேர‌ம் ஒரு குழ‌ந்தையுட‌ன் விளையாடிக் கொண்டிருக்க‌ முடியாதே.

இத‌ற்கிடையில் என்ன‌ ச‌த்த‌ம் என்று பார்க்க‌ வ‌ந்த‌ சூப்ப‌ர்வைஸ‌ர் பெண்ம‌ணியையும் "ஹேய் நேஹா, இங்க‌பாரு மேட‌ம் கூட‌ உன் ஃபேன் ஆகிட்டாங்க‌" என்று க‌லாய்த்த‌ப‌டி சூழ‌லைச் ச‌க‌ஜ‌மாக்கி விடுவார்க‌ள்.

இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?

உட்காரவோ அலைபேசவோ கூட‌ அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற‌ அலுப்பூட்டும் கேள்விக‌ளையே இட‌மும் வ‌ல‌மும் ச‌ந்தித்த‌ப‌டி இருக்கும் அந்த‌ப் பெண்கள் எப்போதாவது வ‌ந்து வ‌ம்பிழுக்கும் ப‌ரிச்ச‌ய‌மான‌ குழ‌ந்தையின் வ‌ர‌வை ஆவ‌லுட‌ன் எதிர்பார்ப்ப‌தில் ஆச்ச‌ரிய‌மென்ன‌ இருக்க‌ முடியும்?

மாலையில் மென‌க்கெட்டு ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் க‌டைக்கு அனுப்பிவைத்தேன்.